4 பேரிடம் ரூ. 1.30 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பலுக்கு வலை
புதுச்சேரி: புதுச்சேரியில் 4 பேரிடம் 1.30 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர்.
முத்தியால்பேட்டையை சேர்ந்தவர் உத்தமன். இவர் பொருட்கள் அனுப்ப ஆன்லைனில் பார்த்துள்ளார். அதன் மூலம், மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். பொருட்கள் அனுப்ப முன் பணம் அனுப்ப வேண்டும் என, அந்த நபர் கூறியதால், 80 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
ரெட்டியார்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர், ஓட்டலில் ரூம் புக் செய்ய ஆன்லைனில் தேடியுள்ளார். மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, முன் பணம் அனுப்பினால், ரூம் புக் செய்யப்படும் என கூறினார். அதை நம்பி, 27 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
இதேபோல், மூலக்குளத்தை சேர்ந்த சந்திரசேகர், 17 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த கவிதா, 6 ஆயிரம் ரூபாய் ஏமாந்தனர். இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.