விடுமுறையில் விதைப்பந்து தயாரிப்பு பள்ளி மாணவர்கள் அசத்தல்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, அரையாண்டு விடுமுறையில் விதைப்பந்து தயாரித்த மாணவர்கள், வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
பொள்ளாச்சி அருகே, ஏரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், அரையாண்டு விடுமுறையை பயன் உள்ளதாக கழிக்க ஆசிரியர் கீதா, அறிவுரை வழங்கினார்.
ஆசிரியர், ஆயிரம் விதைகளை மாணவர்களுக்கு பிரித்து கொடுத்து விதை பந்து தயாரிக்கும் விதம் குறித்து விளக்கம் அளித்தார்.
அதன்படி, மாணவி ரதீஷா, வீட்டில் இருந்து, 750 விதைப்பந்துகளை தயாரித்தார். மேலும், மாணவியர் அனுபிரியா, தர்ஷினி, பூமிகா போன்றோர் இணைந்து மொத்தம், 2,000 விதைபந்துகளை தயாரித்தனர்.
இவற்றை, ஊர்பொதுமக்கள், பெற்றோர், பெரியவர்கள் என அனைவருக்கும் மாணவியர் வழங்கினர். மேலும், மாணவர் வேதாச்சலம், பள்ளியில் உள்ள மூலிகை தோட்டத்துக்கு விடுமுறை நாட்களிலும் அன்றாடம் தண்ணீர் ஊற்றி பராமரித்து வந்தார்.
விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் சேவையை பள்ளி தலைமையாசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
தொடர்ந்து, மாணவர் வேதாச்சலம், நெகிழி அரக்கன் எனும் வேடமணிந்து பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்; அதற்கு மாற்று பொருட்களை பயன்படுத்தக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, மாற்றுப்பொருட்களான கூடை, மஞ்சப்பை, துணிப்பை, காகிதப்பை, சில்வர் பாத்திரங்கள், சில்வர் கரண்டிகள் போன்றவை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மாணவியர் தயாரித்த விதைப்பந்துகள் அனைவருக்கு வழங்கப்பட்டது.