'இ-நாம்' திட்டத்தில் மக்காச்சோள ஏலம்
உடுமலை, ; இ - நாம் திட்டத்தின் கீழ், மக்காச்சோளத்தை விற்பனை செய்து, விவசாயிகள் பயன்பெற, பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டது. சாகுபடியில், அறுவடை பணிகள் துவங்கியுள்ளது.
அறுவடை செய்த மக்காச்சோளத்தை காய வைக்க தேவையான உலர்களங்கள் மற்றும் இடைத்தரகர்கள் இல்லாமல், இ-நாம் திட்டத்தின் கீழ், ஏலம் விட பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில், 357 குவிண்டால் மக்காச்சோளம், 7 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. விற்பனை கூட கண்காணிப்பாளர் ராமன் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.
இந்த சீசனில், விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்க பெதப்பம்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை பயன்படுத்தி கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும் என, திருப்பூர் மாவட்ட விற்பனை குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.