துரைப்பாக்கம் 'மியாவகி' அடர்வனம் கால்நடைகளுக்கு தீவனமாகும் அவலம்

துரைப்பாக்கம்:சென்னையின் பசுமையை அதிகரிக்க, மாநகராட்சி சார்பில், மியாவகி' என்ற, அடர்வனம் அமைக்கும் திட்டம், 2019ம் ஆண்டு துவங்கப்பட்டது.

சோழிங்கநல்லுார் மண்டலம், 195வது வார்டு, துரைப்பாக்கம், ராஜிவ்கார்டனில், 25,000 சதுர அடி பரப்பில், 2020ம் ஆண்டு, 10 லட்சம் ரூபாய் செலவில், அடர்வனம் அமைக்கப்பட்டது.

இதில், 45 மர வகைகளை சேர்ந்த, 1,500 கன்றுகள் மற்றும் செடி வகைகளை சேர்ந்த, 1,700 கன்றுகள் நடப்பட்டன.

தொடர் பராமரிப்பால், 10 முதல் 20 அடி உயரம் வரை, மரமாக வளர்ந்தன. இரண்டு ஆண்டில் அடர்வனமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பல மரங்களை வெட்டி அகற்றியதுடன், குறைந்த உயரம் கொண்ட மரங்கள், செடிகள் கால்நடைகளுக்கு தீவனமாக மாறின.

சுற்றிலும் நிரந்தர தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என, வார்டு கவுன்சிலர் ஆறு மாதத்திற்குமுன், கூட்டத்தில் தீர்மானம் வைத்துள்ளார். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், அடர்வனம் வறண்ட வனமாக மாறியதாக, அப்பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

அடர்வனமாக பாதுகாக்கும் வகையில், சுற்றிலும் தடுப்பு சுவர் கட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், வார்டு குழுவில் தீர்மானம் நிறைவேற்றி, நிதி ஒதுக்க மேல் நடவடிக்கைக்கு அனுப்பி உள்ளோம்.

விரைவில் நிதி ஒதுக்கப்படும் என, நம்புகிறோம். கால்நடைகள் செல்லாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement