அடுக்குமாடி குடியிருப்புகளில் சேரும் கழிவுநீர் லாரி வாயிலாக வெளியேற்றுவதாக குற்றச்சாட்டு
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில், கேளம்பாக்கம், தையூர், மாம்பாக்கம், பொன்மார், புதுப்பாக்கம், சிறுசேரி உள்ளிட்ட 50 ஊராட்சிகள் உள்ளன.
இதில், சென்னை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், பல அடுக்குமாடி குடியிருப்புகள், கல்வி, தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள், பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன.
குறிப்பாக, சென்னை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் பல அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகியுள்ளன. அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனங்கள் பல்வேறு வசதிகள் இருப்பதாக கூறி விளம்பரங்களையும் செய்கின்றனர்.
இதனால், வேலை, கல்வி போன்ற தேவைகளுக்கு வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சொந்தமாகவும், வாடகையிலும், குடும்பத்துடன் அடுக்குமாடியில் குடியேறுகின்றனர்.
அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கவில்லை.
இதனால், நேரடியாகவும், கழிவுநீர் லாரிகள் வாயிலாகவும் இரவு நேரங்களில் ஓ.எம்.ஆர்., சாலை அருகே பக்கிங்காம் கால்வாய்க்கு செல்லும் வடிகால்வாய்கள், மாம்பாக்கம், போலச்சேரி ஏரி வடிகால்வாய்கள் என பல்வேறு நீர்நிலை பகுதிகளில் விடப்படுகிறது.
இதனால், சுகாதாரம் பாதிப்பு , நீர் நிலை மாசடைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் அடுக்குமாடி குடியிருப்புகளில் கழிவுநீரை வெளியேற்றும் முறை குறித்தும், கழிவுநீர் லாரிகள் வாயிலாக நீர்நிலைகளில் விடப்படுவது குறித்தும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.