சாலை நடுவே 'பார்க்கிங்' வாகன ஓட்டிகள் 'திக்... திக்'

காஞ்சிபுரம்:சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆறு வழிச்சாலை விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது. பொன்னேரிக்கரை கூட்டுச்சாலையில், மேம்பாலம் அமைக்கும் பணிக்கு மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு, இருபுறமும் வாகனங்கள் செல்கின்றன.

தற்போது, மேம்பாலத்தின் இருபுறமும் மண் கொட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுஉள்ளதால், தனியார் கனரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் மேம்பாலம் அருகே நிறுத்தப்படுகின்றன.

காஞ்சிபுரத்தில் இருந்து பொன்னேரிக்கரை வழியாக, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தை கடந்து செல்லும் போது, சாலை நடுவே நிறுத்தப்பட்ட வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக, பெங்களூரு, மைசூரு, ஓசூர், வேலுார் ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் மேம்பாலம் அருகே கடக்கும் போது விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது.

இந்த வாகன விபத்தை தவிர்க்க, பொன்னேரிக்கரை சாலை மேம்பாலத்தின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, பொன்னேரிக்கரை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement