மின்கம்பியில் உரசும் மரங்கள் பேரீஞ்சம்பாக்கத்தில் அபாயம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சியில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகளுக்கு படப்பை மின்வாரிய அலுவலகம் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் இருந்து, காரணித்தாங்கல் -- பேரீஞ்சம்பாக்கம் சாலையோரம் மின்கம்பங்கள் வழியாக மின்வழித்தடம் செல்கிறது. இந்த மின்வழித்தடத்தில் செல்லும் மின்கம்பிகள் மீது, கருவேல மரங்கள் உரசுகின்றன.

மின்வாரிய ஊழியர்கள் முறையாக பராமரிக்காததால், வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், மின்கம்பியில் உரசும் கருவேல மரங்களால் மின்கம்பி துண்டித்து, சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்வழித்தடத்தில் இடையூறாக வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement