பொங்கல் தொகுப்பில் ரொக்கம் முதல்வர் ஸ்டாலின் பரிசீலனை
சென்னை: பொங்கல் பரிசு தொகுப்புடன் பணம் வழங்குவது குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுஉள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழக அரசு சார்பில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, பச்சரிசி, வெல்லம், கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அத்துடன் பணமும் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில், பணம் இடம் பெறவில்லை. நிதி நெருக்கடி காரணமாக பணம் வழங்கவில்லை என, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
வரும் 9ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக, அரிசி அட்டைதாரர்களுக்கு, டோக்கன் வழங்கும் பணி நடந்து வருகிறது. இம்முறை ரொக்கம் இல்லாததால், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
ரொக்கம் வழங்காததற்கு, எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க., கூட்டணி கட்சியினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
எனவே, பொங்கல் பரிசு தொகுப்புடன், பணம் வழங்குவது குறித்து, நிதித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வேறு ஏதேனும் ஒரு திட்ட செலவை குறைத்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு, சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.