இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது
சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவின்படி, கடந்த அக்டோபர் மாதம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி துவங்கியது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்க, ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. ஆன்லைன் வழியாகவும், ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் நேரடியாகவும் விண்ணப்பம் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
வாக்காளர் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து, தகுதியான நபர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறந்தவர்கள் பெயரை நீக்கி, இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
சென்னையில் மாநகராட்சி கமிஷனர், மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியட உள்ளனர். இதை அடிப்படையாக வைத்து, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு வரையறை பணிகளை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.