சபரிமலையில் தரிசனத்திற்கு பல மணி நேரம் காத்திருப்பு
சபரிமலை: தொடர்ந்து அலை மோதும் பக்தர்களால் சபரிமலை திணறி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து 18 படியேறி வினாடி நேரம் தரிசனத்திற்கு காத்திருக்கின்றனர்.
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை டிச. 30 மாலை 4:00 மணிக்கு திறக்கப்பட்டது. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டதால் நிலக்கல்லிலும், பம்பையிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 31 ல் கூட்டம் ஓரளவு குறைந்ததால் பம்பையில் பக்தர்கள் தடுப்பது கைவிடப்பட்டது. எனினும் அவர்களின் வருகை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.
நீண்ட வரிசை
பத்தனம்திட்டா - -நிலக்கல் -- சாலக்கயம் பாதையிலும், எருமேலி- - கரிமலை - -வலியான வட்டம் வழியிலான பெருவழி பாதையிலும், சத்திரம் - புல் மேடு பாதையிலும் பக்தர்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றனர். பம்பையில் இருந்து மலையேறி 18 படிகளில் ஏறுவதற்கான கியூ கடந்த ஒரு வாரமாக எப்போதும் மரக் கூட்டத்தை தொட்டு காணப்படுகிறது. சில நாட்களில் இந்த கியூ சபரி பீடம் வரை இருந்தது.
நேற்று பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. இதனால் ஆறு மணி நேரம் வரை காத்திருந்து தான் 18 படிகளில் ஏறினர்.
பின்னர் 'பிளை ஓவர்' வழியாக சன்னிதானம் முன் வரும் போது வினாடி நேர தரிசனம் தான் இவர்களுக்கு கிடைக்கிறது. எனினும் ஐயப்பனை வணங்கிய ஆனந்தத்தில் இவையெல்லாம் ஒரு சிரமமே இல்லை என்று கூறுகின்றனர்.
சத்திரம் - புல் மேடு பாதைகளில் வரும் பக்தர்களுக்கு சன்னிதானம் பெரிய நடை பந்தலில் உள்ள மேடையை ஒட்டி தனி கியூ அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் வழக்கமான கியூவில் இருந்து வெளியேறி 18 படிகளுக்கு முன் வந்து நெரிசல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டு பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர். இதனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
முன்னேற்பாடு
சபரிமலையில் தற்போது பகலில் அதிக வெயில் இரவில் கடுமையான குளிர் என காலநிலை நிலவுகிறது. மகரஜோதிக்குஇன்னும் எட்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். ஜன.13, 14ல் பக்தர்களின் ஆன்லைன் முன்பதிவு 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு முன்பாக வரும் பக்தர்கள் ஜோதி தரிசனத்திற்காக சன்னிதானத்தில் தங்குவார்கள் என்பதால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜோதி தெரியும் பம்பை ஹில்டாப், அட்டத்தோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு முடிந்த அளவு எண்ணிக்கையில் பக்தர்களை அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக தினமும் உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் சன்னிதானத்தில் நடக்கிறது.