குழந்தைகளின் தோஷம் தீர்க்கும் புள்ளுவன் பாட்டு
சபரிமலை: புள்ளு என்ற பறவையிலிருந்து குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்களை தீர்க்க சபரிமலையில் புள்ளுவன் பாட்டு நடைபெறுகிறது.
சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோயிலின் வலது பக்கம் நாகர் சன்னதி அருகே சிறிய வீணை மீட்டி பாடல்கள் பாடி பக்தர்களுக்கு வழிபாடு நடைபெறும். இதை புள்ளுவன் பாட்டு என்று அழைக்கின்றனர். இதற்கு பல்வேறு ஐதீகங்கள் கூறப்படுகிறது.
ஐயப்பனுக்கு தோஷங்கள் நீங்க பந்தளம் மன்னர் புள்ளுவன் பாட்டு சமர்ப்பிப்பதாக ஒரு ஐதீகம் உள்ளது. பக்தர்களின் நாக தோஷம், நாக்கு தோஷம், கண் தோஷம், பாத தோஷம் போன்றவற்றை தீர்ப்பதற்காக இந்த வழிபாடு நடைபெறுவதாக மற்றொரு ஐதீகம் கூறுகிறது. குழந்தை பேறு கிடைப்பதற்கும், வீடுகளில் ஐஸ்வரியம் பெருகுவதற்கும் இது பாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
புள்ளு என்ற பறவையிலிருந்து பச்சிளம் குழந்தைகளுக்கு தோஷம் ஏற்படுவதாகவும், புள்ளுவர் அதை வீணை மீட்டி பாடினால் அந்த தோஷம் விலகும் என்றும் 2011 முதல் சபரிமலையில் புள்ளுவன் பாட்டு பாடும் பெரும்பாவூரை சேர்ந்த சுரேஷ் கூறினார். இவர்கள் மீட்டும் வீணை பிரம்மா, விஷ்ணு, சிவனிடமிருந்து கிடைத்ததாக ஐதீகம் கூறுகிறது.
பலா மற்றும் ஆஞ்ஞிலி ஆகிய இரண்டு மரங்களில் மட்டுமே இந்த வீணை செய்யப்படுகிறது. ஆலப்புழா ,திருச்சூர், எர்ணாகுளம் மாவட்டங்களில் புள்ளுவன் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வழிபாடை சபரிமலையில் நடத்துகின்றனர். பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானம் ஆகும்.