பெண்ணுக்கு அனுமதியின்றி 'காப்பர் டி' புகாரளித்த ஹிந்து முன்னணி செயலர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் பகுதியை சேர்ந்த மருது மகள் கார்த்திகா, 31, பிரசவத்திற்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில், கடந்த ஆண்டு டிச., 3ல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அவருக்கு தொடர் ரத்தப்போக்கு இருந்தது. வீடு அருகில் உள்ள கண்டியப்பேரி அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

பிரசவத்தின் போது அரசு மருத்துவமனையில் கருத்தடை சாதனமான காப்பர் டி முறையாக பொருத்தப்படாததால் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் அவர் மீண்டும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அனுமதியின்றி அவருக்கு காப்பர் டி பொருத்தப்பட்டது குறித்து மருது, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் ஆகியோர் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் லதா உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். குற்றாலநாதன் இதுகுறித்து வீடியோ பதிவிட்டார்.

அரசு மருத்துவமனை மீது அவதுாறு பதிவிட்டதாக கூறி, மருத்துவமனை உறைவிட டாக்டர் கலாராணி மகாராஜநகர் போலீசில் புகார் செய்தார். குற்றாலநாதன், மருது மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

குற்றாலநாதனை நேற்று மதியம் கைது செய்து, ஸ்டேஷனுக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அவர் கைதானதை கண்டித்து ஸ்டேஷனை முற்றுகையிட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றாலநாதன் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நடுவர் சத்யா, குற்றாலநாதனை சிறையில் அடைக்க முடியாது எனவும், கார்த்திகா புகாரில் டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா, மருத்துவமனை மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பின்னர், குற்றாலநாதனை ஜாமினில் விடுவித்தார்.

கார்த்திகா புகாரில், டீன், உறைவிட டாக்டர், டாக்டர்கள் மீது அனுமதி இன்றி கருத்தடை சாதனம் பொருத்தியது குறித்து வழக்கு பதிவு செய்ய போலீசார் சி.எஸ்.ஆர்., மட்டும் வழங்கினர். இந்த சம்பவத்திற்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement