2வது திருமணம் செய்ய முயன்றவர் அடித்து கொலை

கோலார்: கோலாரை சேர்ந்தவர் உஸ்மான், 28. ஐந்து ஆண்டுகளுக்கு முன், அதே ஊரை சேர்ந்த ஜபீன் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஜபீன், சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேவேளையில், மனைவியின் உறவுக்கார பெண்ணை, உஸ்மான் காதலிக்க துவங்கி உள்ளார். இதை தன் மனைவியிடம் தெரிவித்தபோது, இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டது. மகளிர் போலீசில், மனைவி ஜபீன் புகார் செய்தார். இதனால், கணவன் - மனைவி பிரிந்தனர். தாயார் வீட்டுக்கு ஜபீன் சென்றுவிட்டார்.

இம்மாதம் 4ம் தேதி மனைவியை பார்க்க சென்ற உஸ்மான், மனைவியின் உறவுக்கார பெண்ணை, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அப்போதும் மனைவி சண்டைபோட்டார்.

இதனால் உஸ்மான் வீட்டில் இருந்து வெளியேறினார். ஜபீன், தன் உறவினர்களிடம், உஸ்மானின் எண்ணத்தை கூறினார். கோபமடைந்த அவர்கள், நுார் நகர் வழியாக சென்று கொண்டிருந்த உஸ்மானை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினர்.

தகவலறிந்து வந்த போலீசார், உஸ்மானை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக, 25 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அப்ரீத், ஜமிர், நாசிர், சல்மான் பாஷா ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement