தங்கவயலில் இருந்து தமிழகம் செல்லும் பஸ்களில் கட்டணம் குறைவால் வரவேற்பு
தங்கவயல்: தங்கவயலில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் கட்டணம் குறைவாக உள்ளதால், தமிழக பஸ்களில் கூட்டம் அதிகமாகிறது. தங்கவயலில் இருந்து பெங்களூருக்கு ரயிலில் செல்ல 20 ரூபாய். ஆனால் பஸ் கட்டணம் 129 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ராபர்ட்சன்பேட்டை கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் டிப்போவில் 116 பஸ்கள் உள்ளன. பங்கார்பேட்டை, கோலார், பெங்களூரு; தமிழகத்தின் குடியாத்தம், வேலுார், சென்னை; ஆந்திராவின் குப்பம், சாந்திபுரம், வி.கோட்டா ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன.
கர்நாடகாவில் நேற்று முதல் 15 சதவீத பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால், பயணியர் கர்நாடக அரசு பஸ்சை விட, பிற மாநில அரசு பஸ்களிலும், தனியார் பஸ்களிலும் தான் பயணம் செய்ய விரும்புகின்றனர்.
ராபர்ட்சன்பேட்டையில் இருந்து பங்கார்பேட்டைக்கு முன்பு சாதாரண பஸ்களில் 15 ரூபாய் கட்டணம் 18 ரூபாயாகவும்; எக்ஸ்பிரஸ் பஸ்களில் 17 ரூபாய் கட்டணம் 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஆனால், தனியார் பஸ்களில் 15 ரூபாய் மட்டுமே கட்டணம் பெறுகின்றனர்.
அதே போல, சாதாரண பஸ்சில் கோலாருக்கு 30 ரூபாய் கட்டணம் 35 ரூபாயாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்சில் 37 ரூபாய் கட்டணம் 43 ரூபாயாகவும் உயர்த்தி உள்ளனர். தனியார் பஸ்களில் 30 ரூபாய் தான் கட்டணம். ராபர்ட்சன்பேட்டையில் இருந்து பெங்களுருக்கு சாதாரண பஸ் கிடையாது. எக்ஸ்பிரஸ் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதன் கட்டணம் 112 ரூபாயாக இருந்தது. தற்போது 129 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
ராபர்ட்சன்பேட்டையில் இருந்து பேத்தமங்களாவுக்கு சாதாரண பஸ்சில் 15 ரூபாய் கட்டணம், 18 ரூபாயாகவும், எக்ஸ்பிரஸ் பஸ்சில் 17 ரூபாயாக இருந்த கட்டணம் 20 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. தனியார் பஸ்சில் 15 ரூபாய்.
ராபர்ட்சன்பேட்டையில் இருந்து தமிழகத்தின் குடியாத்தம் செல்ல பஸ் கட்டணம் 106 ரூபாயாக இருந்தது. இது 110 ரூபாயாக அதிகரித்து உள்ளது. தமிழக பஸ்களில் 110 ரூபாய் கட்டணம். ேலுாருக்கு 139 ரூபாயாக இருந்தது 149 ரூபாயாகவும், சென்னைக்கு 254 ரூபாய் கட்டணம் 261 ரூபாயாகவும் அதிகரித்து உள்ளது. தமிழக பஸ்களில் வேலுாருக்கு 140 ரூபாய், சென்னைக்கு 250 ரூபாய் ஆக உள்ளது.
ராபர்ட்சன்பேட்டையில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் பஸ்களில் கட்டணம் குறைவாக உள்ளது. இதனால், பலரும் தமிழக பஸ்களில் பயணிக்கின்றனர்.
தனியார் பஸ்கள்
பெண்களுக்கு பஸ் பயணம் இலவசம் என அறிவித்த கர்நாடக அரசு, தற்போது கட்டணத்தை 15 சதவீதமாக உயர்த்தி இருப்பது அதிகமாக உள்ளது. 5 சதவீதமாக உயர்த்தி இருக்கலாம். இதனால் அரசு பஸ்சில் பயணிப்பதை தவிர்த்து தனியார் பஸ்களில் பயணிப்பதே மேல்.
- கே. கணேஷ், கவுதம் நகர், தங்கவயல்.
துாண்டி விடும் அரசு
டீசல் உட்பட உதிரி பாகங்கள் விலை எல்லாம் உயர்ந்து விட்டதால் தான் கட்டண உயர்வை தவிர்க்க முடியவில்லை என்று கர்நாடக அரசு கூறுகிறது. ஆனால், தமிழக, ஆந்திர அரசுகளும், தனியார் பஸ்களும் கட்டணத்தை உயர்த்தவில்லை. மற்ற மாநில அரசுகளை கட்டணம் உயர்த்த துாண்டி உள்ளதாக தெரிகிறது.
- தாஸ், சாம்பியன் ரீப், தங்கவயல்
அடுத்து என்ன உயரும்?
கர்நாடக மாநில அரசின் ஐந்து உத்தரவாத திட்டங்களை நிறைவேற்ற மற்றவைகள் மீது சுமையேற்றுகின்றனர். மதுபான விலை உயர்த்தினர். தற்போது பஸ் கட்டணம். இன்னும் வேறு எதை உயர்த்த போறாங்களோ. ஏழை, நடுத்தர மக்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- கே.பாஸ்கர், மாரி குப்பம்