தொழிலாளர் துறை சோதனையில் 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தொழிலாளர் துறை சோதனையில் 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ஈரோடு, : ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையிலான தொழிலாளர் துணை ஆய்வர், உதவி ஆய்வர்கள் கடந்த டிச., மாதம் மாவட்ட அளவில் ஆய்வு மேற்கொண்டனர்.
எடையளவு சட்டத்தில் உரிமம் பெறப்பட்டுள்ளதா, உரிய பதிவேடு, சரிபார்ப்பு சான்றுகளை தெரியும்படி வைத்திருத்தல், சோதனை எடைக்கற்கள் பராமரித்தல் உள்ளிட்டவை குறித்து, 104 கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், 43 கடைகளில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
தண்ணீர் பாட்டில், வெளிநாட்டு சிகரெட், இறக்குமதி சிகரெட் லைட்டர் விற்பனை கடைகள், நிறுவனங்கள், அடுமனை நிலையம் என, 39ல் நடந்த ஆய்வில், 7ல் முரண்பாடு கண்டறியப்பட்டது. குழந்தை தொழிலாளர், வளரிளம் பருவ தொழிலாளர் குறித்து, 96 இடங்களில் நடந்த சோதனையில், பவானி பகுதியில் ஒரு கடையில் வளரிளம் பருவ தொழிலாளர் மீட்கப்பட்டார்.
குறைந்தபட்ச ஊதிய சட்டத்தில் ஓட்டல், ரெஸ்டாரென்ட், பீடி நிறுவனங்கள் என, 57 நிறுவனங்களில் நடத்தி ஆய்வில், 11 நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஊதியம் வழங்காதது கண்டறியப்பட்டது.
இவ்வாறு ஜெயலட்சுமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.