2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
பெங்களூரு : உத்தர பிரதேசம், பிரயாக்ராஜைச் சேர்ந்தவர் அனுாப் குமார், 38. மென் பொறியாளரான இவர், கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.
இவரது மனைவி ராக்கி, 35. இந்த தம்பதிக்கு அனுப்ரியா, 5, என்ற மகளும், பிரியங்க், 2, என்ற மகனும் இருந்தனர். இவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சதாசிவ நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சிறுமி அனுப்ரியா உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். குழந்தைகளை பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளுக்கும் இரண்டு பணியாட்களை நியமித்திருந்தனர்.
நேற்று முன்தினம் வீட்டு பணியாட்களிடம், 'நாங்கள் நாளை புதுச்சேரிக்கு செல்ல வேண்டும். எனவே, காலை சீக்கிரமாக பணிக்கு வாருங்கள்' என, தம்பதி கூறியுள்ளனர்.
இதன்படி நேற்று அதிகாலையே பணியாட்கள் வந்தனர். நீண்ட நேரமாக அழைப்பு மணியை அழுத்தியும், கதவு திறக்கப்படவில்லை.
தாழிடப்படாத கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, அனுாப் குமாரும், அவரது மனைவியும் துாக்கில் சடலமாக தொங்கினர். குழந்தைகளும் இறந்து கிடந்தனர்.
அதிர்ச்சி அடைந்த பணியாளர்கள், அக்கம் பக்கத்தினரிடம் விஷயத்தை கூறி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்ற பின், தம்பதி தற்கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.