'தி.மு.க.,வுக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்!'

1

சென்னை: “தி.மு.க., அரசுக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம்,” என கவர்னர் ரவிக்கு போக்கு வரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி:



தமிழக சட்டசபையை, தமிழக மக்களை அவமதிக்கும் வகையில் கவர்னர் ரவி நடந்து கொண்டார். தமிழக சட்டசபையில் பாரம்பரியமாக நடக்கும் நிகழ்வுகளை மாற்றும் முயற்சியில், கவர்னர் இறங்கினார்; அது நடக்கவில்லை.

முதல்வர் ஸ்டாலின் அரசின் சாதனைகளை முழுதும் விவரிக்கும் வகையில், கவர்னர் உரை உள்ளது.

அதை வாசிக்கக்கூடாது என்பதற்காகவே, இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறார்.

தேசிய கீதம் பாடப்படவில்லை என, அதற்கு காரணம் சொல்லியிருக்கிறார்.

தேசபக்தியை ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்திருப்பது போல கவர்னர் பேசுகிறார். தேச பக்தியில் தமிழக மக்களை விஞ்சியவரல்ல அவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை இழந்தவர்கள் தமிழகத்தில் ஏராளம்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவர்னர், முதல்வர்களாக இருந்திருக்கின்றனர்.

அவர்கள் எல்லாம், சட்டசபையில் கவர்னர் உரை வாசிக்கும் முன்னரே தேசிய கீதத்தை பாட வேண்டும் என, எங்கும் சொல்லவில்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதலில் பாடப்பட்டது. ஆனால், தேசிய கீதத்தையும் நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே பாட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கவர்னர் ரவி. தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த விழைகிறார். அப்படியொரு வாதத்தை வைத்து, சட்டசபையில் அரசியல் நாடகம் நடத்திய கவர்னர் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும்.

தான் நியமிக்கப்பட்ட கவர்னர் என்பதை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட பெரியவர் என்ற சிந்தனையில் ரவி செயல்பட்டு வருகிறார். 'கவர்னர் ரவியே வெளியேறு' என்று கோஷமிடும் சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்.

தி.மு.க.,வுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தேச பக்தி பாடத்தை, கவர்னர் எடுக்க வேண்டாம்.

சட்டசபையில் தேசிய கீதம் பாடப்படும் வரை இருக்காமல், துவக்கத்திலேயே சபையை விட்டு வெளியேறிய கவர்னர் ரவிதான் தேசிய கீதத்தை அவமதித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement