‛குரூப் 'டி' பணியில் 30 ஆண்டுகள் கடந்தவர்களுக்கான ஊதிய உயர்வு கருவூலத்துறை சுணக்கம்
விருதுநகர்: அரசு துறைகளில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துாய்மை பணியாளர்களாக பதவி உயர்வு பெறாமல் 30 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்தாலும் வழங்குவதில் கருவூலத்துறையினர் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துாய்மை பணியாளர் உள்ளிட்ட குரூப் 'டி' பணிகளில் எவ்வித பதவி உயர்வும் பெறாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக பணியாற்றுபவர்களுக்கு 30 ஆண்டுகள் கடந்த பின் ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. இந்த பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்காக அந்தந்த துறைகளில் இருந்து பரிந்துரை செய்து கருவூலத்துறைக்கு அனுப்பப்படுகிறது.
ஆனால் இது போன்ற ஊதிய உயர்வு வழங்க முடியாது எனக்கூறி கருவூலத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர் என மற்ற துறை அலுவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அரசாணை இருப்பதை சுட்டி காட்டியும், தாங்கள் வழங்க முடியாது எனக்கூறியதை எழுத்து பூர்வமாக கொடுங்கள் என கேட்கும் போது நடவடிக்கை எடுத்து ஊதிய உயர்வு வழங்குகின்றனர்.
குரூப் 'டி' பணிகளில் எவ்வித பதவி உயர்வும் இன்றி 30 ஆண்டுகளை கடந்தவர்கள் பெரும்பாலும் ஓய்வு பெறும் நிலையிலேயே உள்ளனர். இவர்களுக்கு ஓய்வு பெறும் நேரத்தில் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை வழங்குவதில் கூட கருவூலத்துறையினர் சுணக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே குரூப் 'டி' பணிகளில் 30 ஆண்டுகளை கடந்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வை கருவூலத்துறையினர் தாமதப்படுத்தாமல் வழங்க நடவடிக்கை வேண்டும்.