நகராட்சி, பேரூராட்சியில் ஊராட்சியை இணைப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ராமநாதபுரம்: மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சிகளுடன் கிராமங்களை இணைக்கும் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள் அருகேயுள்ள ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர். இதில் மரைக்காயர் பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், மக்களுடன் அளித்த மனுவில் மண்டபம் பேரூராட்சி உடன் ஊரை இணைத்தால் வரி உயர்ந்துவிடும், நுாறுநாள் வேலை பறிபோய்விடும் எனவே மண்டபம் பேரூராட்சியில் மரைக்காயர் பட்டினத்தை இணைக்க கூடாது எனக் கூறியுள்ளனர்.
இதுபோல் கீழக்கரை நகராட்சி உடன் தில்லையேந்தல் ஊராட்சி மருதன்தோப்பு, மனீஸ்வரம் ஆகிய பகுதிகளை இணைக்க கூடாது. ஊரில் பலர் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளனர். நுாறுநாள் வேலையை நம்பி வாழ்கின்றனர். எனவே கீழக்கரை நகராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதுபோல அச்சுந்தன்வயல் ஊராட்சி, புத்தேந்தேல் ஊராட்சி கூரியூர் பகுதி மக்களும் ராமநாதபுரம் நகராட்சியுடன் தங்களது ஊர்களை இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.