சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த விடாமல் தடுக்குறாங்க குறைதீர் கூட்டத்தில் குவிந்த மனுக்கள்
திண்டுக்கல்: சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த விடாமல் தடுக்குறாங்க,பாதிக்கப்பட்ட நிலத்தடி நீர் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று திண்டுக்ல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் தங்கள் பிரச்னைகளை மனுக்கள் வாயிலாக கொட்டி தீர்த்தனர்.
கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 213 மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம், புளியூர்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட பெரியகுழிப்பட்டி, சின்னகுழிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடிநாள் நிதியாக ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் சதீஷ்பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ரகலா, ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகேஸ்வரி, கலெக்டர் நேர்முக உதவியாளர் கோட்டைக்குமார், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பங்கேற்றனர்.
கிறிஸ்தவ மக்கள் முன்னணி நிறுவன தலைவர் மரிய ஆரோக்கியம் தலைமையில் ஆத்துார் வக்கம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் சிலுவையுடன் வந்து கொடுத்த மனுவில், வக்கம்பட்டியில் உள்ள சர்ச்சுக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்த விடாமல் இடையூறு செய்யும் வகையிலும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையிலும் சிலர் செயல்படுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்குறிப்பிட்டனர்.
ராணுவ வீரர் தர்ணா: நிலக்கோட்டை ஜம்புதுறைக் கோட்டையை சேர்ந்தவர் அருள் வெனிஸ் 27. இவர் ராணுவத்தில் ஹரியானா, ஹிசார் மாவட்டத்தில் பணியாற்றுகிறார்.
இவர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் குடும்பத்தோடு ராணுவ உடையுடனேயே வந்த அருள்வெனிஸ் மனு கொடுக்கும் அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது,பூர்வீக சொத்தான ஒரு ஏக்கர் நிலம்,அதற்கு செல்லக்கூடிய பொதுப் பாதை ஆகியவற்றை எனது தந்தை செபஸ்தியார், உறவினர்கள் அருளானந்தம், பீட்டர் அந்தோணி, சகோதரிகள் பிரித்து அனுபவித்தனர். எங்களது நிலத்தில் வீடு கட்டி தற்போது குடியிருக்கிறோம். உறவினர்கள் பொதுப் பாதையை பயன்படுத்த விடாமல் பிரச்னை செய்கின்றனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
தந்தை செபஸ்தியார் நிலக்கோட்டை வி.ஏ.ஓ.,, சர்வேயர் ஆகியோரிடம் சொத்து சம்பந்தமாக பட்டா பெயர் மாற்றக் கூடாது என மனு அளித்தார்.
அவர்கள் பணம் பெற்றுக் கொண்டு எனது உறவினர்களுக்கு பட்டா மாற்றி கொடுத்தனர். சொத்துக்களை மீட்டும், பட்டாக்களை ரத்து செய்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தண்ணீரை பார்த்து பதறிய போலீஸ்: மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கும் போதெல்லாம் சிலர் பெட்ரோல், மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சிக்கின்றனர். அதை தடுக்க போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
நேற்று கலங்கலான தண்ணீர் பாட்டிலுடன் ஒருவர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவரை பார்த்ததும் பெட்ரோலுடன் வந்தார் என நினைத்து பதறிய போலீசார் ஓடிச்சென்று அவரை தடுத்தனர்.
அவரிடம் இருந்த பாட்டிலை கைப்பற்றிவிட்டு நடந்த விசாரணையில் அவர் பழநி பேச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயி ராமச்சந்திரன் 65 என்பதும், அந்த பகுதியில் செயல்படும் கயிறு ஆலையால் நிலத்தடி நீர் நிறம் மாறியதால் பாசனம், குடிநீர் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலங்கிய நீருடன் மனு கொடுக்க வந்தது தெரிந்தது.