சத்துணவு மைய அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி ரூ.ஆயிரம்
தேனி:சத்துணவு மையங்களை கூடுதலாக கவனிக்கும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்புப்படியாக ரூ.400 அதிகரித்து ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு மையங்கள் இயங்குகின்றன. இதன் மூலம் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுகிறது.
சத்துணவுத்திட்டத்தை ஒவ்வொரு மையங்களிலும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் இணைந்து செயல்படுத்துகின்றனர். மாநில அளவில் சத்துணவு பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளது.
இதனால் ஒரு சத்துணவு அமைப்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் கூடுதல் பொறுப்பாக சத்துணவு மையங்களை கவனித்து வருகின்றனர். இதனால் இவர்கள் பனிச்சுமையால் அவதிப்படுகின்றனர். சத்துணவு அமைப்பாளர்களுக்கு தினமும் ரூ. 20 வீதம் மாதம் ரூ. 600 பொறுப்புப்படி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் பொறுப்புப்படியினை தினமும் ரூ.33 ஆக உயர்த்தி மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கவும், 2025 ஜனவரி முதல் அதை நடைமுறைப்படுத்தவும் அரசு செயலாளர் ஜெயஸ்ரீ முரளீதரன் உத்தரவிட்டுள்ளார்.