வாகன டிரைவருக்கான ஓய்வூதியத்தை உயர்த்திட கோரி இன்று போராட்டம் தொழிலாளர் சம்மேளன பொது செயலாளர் தகவல்
சிவகங்கை:ஆட்டோ உட்பட அனைத்து வாகன டிரைவர்களுக்கும் மாத ஓய்வூதியத்தை ரூ.6,000 ஆக உயர்த்தி வழங்க வலியுறுத்தி இன்று (ஜன.,8) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிவகங்கையில் ஏ.ஐ.டி.யு.சி., ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொது செயலாளர் பி.மாரியப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் வாங்குவோரிடம் தொழிலாளர் நல வாரியம் வாகன வரியாக ஒரு சதவீதம் பிடிக்கிறது. இந்த வரிப்பணம் ரூ.400 கோடி வரை அரசிடம் உள்ளது. தற்போது டிரைவர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,200 மட்டுமே வழங்குகின்றனர். இதை ரூ.6,000 ஆக உயர்த்திட வேண்டும். டிரைவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவ உதவித்தொகை வழங்க வேண்டும். ஆட்டோக்களுக்கு தனி செயலியை (ஆப்) அரசே ஏற்படுத்த வேண்டும்.
போலீஸ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆன்லைன் மூலம் அதிக அபராதம் விதிப்பதை தவிர்க்க வேண்டும். டிரைவர்கள் விபத்தின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் அரசே வழங்க வேண்டும். வீடில்லா டிரைவர்களுக்கு வீடு அல்லது காலிமனையிடங்களை ஒதுக்க வேண்டும். ஆட்டோ, கார், வேன்களுக்கு நிபந்தனையின்றி பெர்மிட் புதுப்பித்து தர வேண்டும்.
ஆட்டோ, கார், வேன்கள் வாங்க தேசிய வங்கிகளில் மானியத்துடன் கடனுதவி அளிக்க வேண்டும். டிரைவர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.5,000 வழங்க வேண்டும். டூவீலர்களை வாடகைக்கு விடுவோர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜன.,8) காலை 11:00 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.