ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் படிக்கட்டு சேதம்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளதால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் நாடு முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் நலன் கருதி அக்னி தீர்த்த கடற்கரையை அழகுபடுத்த மத்திய அரசு ரூ. 2 கோடி வழங்கியது. இந்நிதியில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் நடைமேடை, ஓலைக்குடாவில் பூங்கா, பக்தர்கள் உடைமாற்றும் அறை, குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. மேலும் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமென்ட் சிலாப்பில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.

வடகிழக்கு பருவ சீசனில் எழும் ராட்சத அலைகளால் இந்த படிக்கட்டுகள் உடைந்து போகும் என ஹிந்து அமைப்பினர் வலியுறுத்தினர். ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது சேதமடைந்துள்ள படிக்கட்டுகளை அகற்றாததால் இதன் வழியாக புனித நீராட செல்லும் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் விழுந்து காயமடைகின்றனர்.

அக்னி தீர்த்த கடற்கரை இயற்கையான மணல் பரப்புடன் இருக்க, உடைந்து கிடக்கும் படிக்கட்டுகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடிந்த படிக்கட்டுகளை சீரமைத்து புதுப்பொலிவு பெற செய்ய வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.

Advertisement