வைகுண்ட ஏகாதசி வைபவம்; நாளை பரமபத வாசல் திறப்பு
திருப்பூர்; வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வாகிய, பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி, நாளை அதிகாலை நடைபெற உள்ளது.
திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில் நாளை, பரமபதவாசல் திறப்பு வைபவம் நடைபெறுகிறது.
பகல் பத்து உற்சவத்தின் நிறைவு நாளாகிய இன்று, நம்பெருமாள், நாச்சியார் திருக்கோலத்துடன் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.
நாளை அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாளுக்கு, மகா திருமஞ்சனம் நடைபெறும். அதனை தொடர்ந்து, பாண்டின் கொண்டை அலங்காரத்துடன், கருடவாகனத்தில் எழுந்தருளி, 5:30 மணிக்கு, பரமபத வாசல் வழியாக பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
சுவாமி தரிசனம் முடிந்து, சொர்க்கவாசல் வழியாக வரும் பக்தர்களுக்கு, ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில், லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது. திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தை, கவுன்சிலர் கண்ணப்பன் ஏற்பாட்டில், மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் நேற்று சுத்தம் செய்தனர்.
l கோவில்வழி வரதராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை சுவாமிக்கு அபிேஷகமும், நாளை அதிகாலை 5:00 மணிக்கு பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது; நாளை மாலை, நம்பெருமாள் திருவீதியுலா நிழ்ச்சியும், ஸ்ரீசண்முகாலயா நாட்டியபள்ளி மாணவியரின், ''வைகுந்தம் தரும் வரதராஜன்' என்ற தலைப்பில் பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. வரும், 11 ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, கூடாரை வெல்லும் உற்சவமும், கூடாரவல்லி நுாறு தடா அக்காரவடிசல் படைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது.
l அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், கருவலுார் கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், பெருமாநல்லுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், நாளை அதிகாலை பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.