மனைவி முகத்தை எவ்வளவு நேரம் பார்ப்பீங்க? ஞாயிறு வாங்க.. வேலை பாருங்க: எல் & டி தலைவர் சர்ச்சை கருத்து
புதுடில்லி: பெரும்பாலான நிறுவனங்களில் ஒருநாளைக்கு 8 மணிநேரம் பணி நேரமும், வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரு நாட்கள் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. சில நிறுவனங்களில் பணியாளர்களை கூடுதல் நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கின்றனர். இந்த நிலையில் லார்சன் & டூப்ரோ (எல் அண்ட் டி) என்ற பன்னாட்டு நிறுவனத்தின் தலைவர் எஸ்.என். சுப்பிரமணியன், வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது ஊழியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக அவர் உரையாடிய வீடியோவில் இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது: உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களை வேலை செய்ய வைக்க என்னால் முடியவில்லை என்று வருந்துகிறேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் உங்களை வேலை செய்ய வைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்கிறேன். வீட்டில் ஓய்வு எடுப்பதால் என்ன லாபம் கிடைக்கப் போகிறது? நீங்கள் வீட்டில் உட்கார்ந்து என்ன செய்கிறீர்கள்? உங்கள் மனைவி முகத்தை எவ்வளவு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்? மனைவிகள் எவ்வளவு நேரம் கணவனைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்.
சீனர்கள் வாரத்திற்கு 90 மணிநேரம் வேலை செய்கிறார்கள், அதே நேரத்தில் அமெரிக்கர்கள் வாரத்திற்கு 50 மணிநேரம் மட்டுமே வேலை செய்கிறார்கள். நாட்டின் வலுவான பணி நெறிமுறையால் சீனா, அமெரிக்காவை மிஞ்சும். அதுதான் உங்களுக்கான பதில். இவ்வாறு அவர் பேசினார்.