கூகுள் மேப்பை நம்பி சென்ற அசாம் போலீசார்; நாகாலாந்து கிராம மக்கள் சுற்றி வளைத்து தாக்குதல்
கவுகாத்தி: கூகுள் மேப் உதவியுடன் சோதனையிட சென்ற அசாம் போலீசார் வழி தவறி, நாகாலாந்து மாநிலத்திற்குள் சென்றனர். அவர்களை கிரிமினல் என நினைத்து அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கிய நிகழ்வு அரங்கேறி உள்ளது.
அசாம் போலீசின் 16 பேர் குழுவினர் தேயிலை தோட்டம் ஒன்றை சோதனையிட சென்றுள்ளனர். அதில் 5 பேர் மட்டும் சீருடையில் இருந்துள்ளனர். மற்றவர்கள் சாதாரண ஆடை அணிந்தபடி இருந்தனர். அந்த எஸ்டேட் இருக்கும் இடம் தெரியாததால், கூகுள் மேப் உதவியுடன் வாகனத்தில் சென்றுள்ளனர். ஆனால், கூகுள் மேப் தவறாக வழிகாட்டியது. இதனை தெரியாமல் அவர்கள் நாகாலாந்தின், மோகோசங் மாவட்டத்திற்குள் சென்று, அங்கிருந்தவர்களிடம் தேயிலை தோட்டம் குறித்து விசாரித்தனர். சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், அவர்களை கிரிமினல்கள் என நினைத்து கடுமையாக தாக்கி சிறை பிடித்தனர்.
தகவல் அறிந்து வந்த நாகாலாந்து போலீசார் மக்களுடன் பேசியதுடன், சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் உண்மை தெரியவந்தது. இதனையடுத்து அசாம் போலீசாரை அப்பகுதி மக்கள் விடுவித்தனர்.