கண்டெடுத்த பணத்தை போலீசில் ஒப்படைத்த கூலித்தொழிலாளி

மயிலாடுதுறை: சீர்காழி அருகே டூவீலரில் சென்ற இளம் பெண் தவறவிட்ட பணம், அடையாள அட்டைகளை கண்டெடுத்த கூலி தொழிலாளி அவற்றை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்த சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா பழையார் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வ பிரியா. இவர் டூவீலரில் சென்றபோது தனது பையில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணம் மற்றும் ஆதார் ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை தவற விட்டுள்ளார். அவற்றை கொள்ளிடம் கடைவீதியில் உள்ள பழக்கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணியாற்றும் சியாளம் கிராமத்தைச் சேர்ந்த ராமஜெயம் மனைவி தமிழ்ச்செல்வி என்பவர் கண்டெடுத்துள்ளார். அது யாருடையது என தெரியாததால் பணம் மற்றும் அடையாள அட்டைகளை தமிழ்ச்செல்வி ஆனைக்காரன் சத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.


அவற்றைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் ராஜா தமிழ்ச்செல்வியை பாராட்டி சால்வை அணிவித்து வெகுமதியாக ரூ.500 வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து அங்கு பணியில் இருந்த போலீசாரும் தமிழ்ச்செல்விக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா பணத்தை தவற விட்டு செல்வ பிரியாவை வரவழைத்து பணம் மற்றும் அடையாள அட்டைகளை ஒப்படைத்தார்.

Advertisement