பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்காதது ஏன்? சட்டசபையில் அமைச்சர் விளக்கம்
சென்னை: '' தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் தான் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படவில்லை,'' என சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
ஆண்டுதோறும் பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இத்தொகை வழங்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இது தொடர்பாக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டு உள்ளதால் தான் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 தரப்படவில்லை. புயல் பாதிப்புக்கு ரூ.37 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டோம். ரூ.276 கோடி மட்டுமே தந்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பல்வேறு திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிலுவையில் வைத்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் சக்கரபாணி அளித்த விளக்கத்தில் கூறியுள்ளதாவது: 2009 ல் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை துவக்கி வைத்தவர் கருணாநிதி. 2017 -18 ல் அ.தி.மு.க., ஆட்சியில் பொங்கல் பரிசாக ஒரு ரூபாய் கூட தரவில்லை. 2021 தேர்தலுக்காக பொங்கல் தொகுப்புடன் பரிசாக தந்தது என விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.