வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கலில் மோசடி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

9

புதுடில்லி:''புதுடில்லி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதலில் மிகப்பெரிய மோசடி நடக்கிறது,'' என அத்தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டில்லி சட்டசபைக்கு பிப்., 5ல் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்.,8 ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ., காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கலில் தவறு நடக்கிறது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி வந்தது. இதனை தேர்தல் கமிஷன் மறுத்தது.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமாரை சந்தித்த பிறகு டில்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுடில்லி சட்டசபை தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயரை நீக்க 22 நாளில் 5,500 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் போலியானவை. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், அவை போலியானவை என கண்டுபிடித்தனர்.
தங்களது பெயரில் போலி விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக பலர் கூறியுள்ளனர். இதை வைத்து பெரிய மோசடி நடக்கிறது. கடந்த 15 நாளில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் எனக்கூறி 13 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தள்ளன.

மற்ற மாநிலங்களில் இருந்து போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். புதுடில்லி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் பர்வேஷ் வர்மா, வேலைவாய்ப்பு முகாம் எனக்கூறி வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்கிறார்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகளின்படி இது முறைகேடு. அவரை தேர்தலில்போட்டியிட தடை செய்ய வேண்டும். அவரது வீட்டில் எவ்வளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என்பதை அறிய ரெய்டு நடத்த வேண்டும்.


இத்தொகுதி தேர்தல் அதிகாரி, பா.ஜ.,வினரிடம் சரணடைந்து உள்ளார். அக்கட்சியினர் தவறு செய்வதற்கு தேவையான உதவிகளை செய்து தருகிறார். இதுபோன்ற தவறுகள் நடக்காது என தேர்தல் கமிஷன் உறுதி அளித்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

Advertisement