சிக்கியது முதலை மண்டை ஓடு: கனடாவுக்கு கடத்த முயற்சித்தவர் கைது

புதுடில்லி: டில்லி சர்வதேச விமான நிலையம் வழியாக, முதலையின் மண்டை ஓட்டை கனடா கடத்த முயற்சித்தவர் கைது செய்யப்பட்டார்.



கடந்த 3 தினங்களுக்கு முன், டில்லி விமான நிலையத்தின் முனையம் 3ல் பாதுகாப்பு சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பயணியை தடுத்து நிறுத்தினர். அவரது லக்கேஜில் இருந்து, துணியில் சுற்றப்பட்ட ஒரு மண்டை ஓடு மீட்கப்பட்டது. மண்டை ஓட்டில் கூர்மையான பற்கள் மற்றும் தாடை போன்ற அமைப்பு இருந்தது, அதன் எடை சுமார் 777 கிராம்.
அது, முதலைக்குட்டியின் மண்டை ஓடு என்பது தெரியவந்தது. இவ்வாறு கொண்டு செல்வது சட்ட விரோதம் என்பதால் போலீசார், அந்த பயணியை கைது செய்தனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'முதலையின் சரியான இனத்தைக் கண்டறிய, அது டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முதலையின் மண்டை ஓடு எங்கே வாங்கப்பட்டது என்று விசாரணை நடக்கிறது, எதற்காக கடத்தப்படுகிறது என விசாரணை நடக்கிறது' என்று தெரிவித்தனர்.

Advertisement