ஈ.வெ.ரா., குறித்த சீமான் கருத்துக்கு அண்ணாமலை ஆதரவு; ஆதாரம் தர தயார் என அறிவிப்பு

65

கோவை: 'ஈ.வெ.ரா., பேசி இருப்பதாக சீமான் கூறிய கருத்தை, ஈ.வெ.ரா., எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


கோவையில் நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை கூறியதாவது: சென்னையில் புத்தக வெளியீட்டு விழாவிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் சீமான் சில கருத்துக்களை பேசி இருக்கிறார். ஈ.வெ.ரா., பேசியது குறித்து, சீமானுக்கு ஆதரவான ஆதாரங்களை நான் தருகிறேன். இதனை பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்பது எனது கருத்து. ஈ.வெ.ரா., பேசியதாக வெளியாகி இருந்த எத்தனையோ புத்தகங்களை அவர்கள் அழித்து விட்டார்கள். அந்த அளவுக்கு ஈ.வெ.ரா., பேசி இருக்கிறார்.


சீமான் ஈ.வெ.ரா., பேசி இருப்பதாக கூறிய கருத்தை, ஈ.வெ.ரா., எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை நான் கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம். அதனை பற்றி நான் பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காரணம், பெண்கள், குழந்தைகள் பார்க்கிறார்கள். ஈ.வெ.ரா., பேசியதை நாம் இப்பொழுது பேச ஆரம்பித்தால் மக்களுக்கு அருவருப்பு வந்துவிடும். அதை போன்று சில வார்த்தைகள் அதில் இருக்கிறது.


ஆனால் ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியது சரிதான் என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. அதற்கு காரணம் ஒரு கருத்தை வைத்து இருக்கிறார்கள். சீமான் ஏன் சொன்னார்கள் என்று அவர்கள் தான் சொல்ல வேண்டும். என்னை பொறுத்தவரை ஈ.வெ.ரா., பேசி இருக்கிறாரா? என்று கேட்டால் அவர் பேசி இருக்கிறார். அதற்கான ஆதாரத்தை தர நான் தயார் என்பதை சொல்கிறேன். நான் இந்த கருத்தை பொதுவெளியில் பேச விரும்பவில்லை. காலம் கடந்து விட்டது. அரசியல் மாறிவிட்டது. மக்கள் அரசியலை புதிய பார்வையில் பார்க்கிறார்கள். ஈ.வெ.ரா இதற்கு முன் பேசியது எல்லாம் பொதுவெளியில் பேசினால் ரொம்ப தவறாக போய்விடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


சட்டசபையா? புலிகேசி படமா?




முன்னதாக,சென்னை விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டசபை வடிவேலுவின் 23ம் புலிகேசி படம் பார்ப்பது போல் இருக்கிறது. சட்டசபையை பார்க்கும் போது புலிகேசி படத்தில் உள்ளது போல் முதல்வரை புகழ்வது தெரிகிறது. வடிவேலுவின் இடத்தை செல்வப்பெருந்தகை பிடித்துவிட்டார்.


சினிமாவில் வடிவேல் பிடித்த இடத்தை, தி.மு.க., கூட்டணி கட்சிகள் பிடித்து விட்டது.
சட்டசபையில் பேசும் எம்.எல்.எல்.ஏ.,க்கள் மக்களை நேரில் சந்திக்கிறார்களா என்பது தெரியவில்லை. மக்கள் இந்த ஆட்சியை பற்றி என்ன கருத்துக்கள் சொல்கிறார்கள் என்பதை கேட்கிறார்களா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement