டிச., மியூச்சுவல் பண்டு எஸ்.ஐ.பி., முதலீடு முதல்முறையாக ரூ.26,000 கோடியை தாண்டியது

புதுடில்லி:கடந்த டிசம்பரில் மியூச்சுவல் பண்டு திட்டங்களில், எஸ்.ஐ.பி., எனப்படும் தவணை முறை வாயிலாக செய்யப்பட்ட முதலீடு, முதல்முறையாக 26,000 கோடி ரூபாயை தாண்டியது.

சந்தையின் ஏற்ற, இறக்கத்திற்கு மத்தியில், நீண்ட கால முதலீடுகளின் மீதான நம்பிக்கையால், முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் அதிகளவில் முதலீடு செய்ததாக மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால், எஸ்.ஐ.பி., வாயிலாக செய்யப்பட்ட முதலீடு 26,459 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில், இது 25,320 கோடி ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டின் டிசம்பருடன் ஒப்பிடும்போது, எஸ்.ஐ.பி., முதலீடு 233 சதவீதம் அதிகரித்தது.

மொத்த மியூச்சுவல் பண்டு போலியோக்களின் எண்ணிக்கை, டிசம்பரில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 22.50 கோடியாக உயர்ந்தது. நவம்பரில் இது, 22.03 கோடியாக இருந்தது.

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சில்லரை சொத்துக்களின் மதிப்பு 39,91,313 கோடி ரூபாயாக உள்ளது. இது நவம்பரில், 39,70,220 கோடி ரூபாயாக பதிவாகி இருந்தது.

கடந்த டிசம்பரில் எஸ்.ஐ.பி., திட்டங்களில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 54,27,201 ஆக அதிகரித்து உள்ளது. இது நவம்பரில் 49,46,408 ஆக இருந்தது.

மேலும், எஸ்.ஐ.பி., முறையில் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு, நவம்பரில் 13.54 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, டிசம்பரில் 13.63 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

மொத்த எஸ்.ஐ.பி., கணக்குகளின் எண்ணிக்கை, நவம்பரில் 10.23 கோடியாக இருந்த நிலையில், டிசம்பரில் 10.32 கோடியாக உயர்ந்து, புதிய உச்சம் தொட்டுள்ளது.

Advertisement