கைத்துப்பாக்கி செக்யூரிட்டி பாதுகாப்புடன் நீதிமன்றம் வந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது
ஓசூர், :சொகுசு காரில், கைத்துப்பாக்கி செக்யூரிட்டிகள் புடை சூழ, ஓசூர் நீதிமன்றம் வந்த கொலை வழக்கில் தொடர்புடைய, 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கவுதாசபுரத்தில் கடந்த, 2024 செப்.,ல் கர்நாடக மாநிலம், சூலகுண்டாவை சேர்ந்த ரேவந்த்குமார்,23, வெட்டிக் கொல்லப்பட்டார். பாகலுார் போலீசார், அதே பகுதியை சேர்ந்த ரேவண்ணா உட்பட, 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கு ஓசூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடக்கிறது.
இந்த வழக்கில், சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், நேற்று ஓசூர் கோர்ட்டுக்கு ரேவண்ணா, உள்ளிட்ட, 5 பேர் ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் வந்தனர். அவர்களுக்கு பின்னால் சபாரி காரில், கைத்துப்பாக்கிகளுடன், 5 தனியார் செக்யூரிட்டிகள் வந்தனர். நீதிமன்ற பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார், தனியார் செக்யூரிட்டிகளுடன் வந்த ரேவண்ணாவை தடுத்து, அவர்கள் வந்த காரோடு சேர்த்து, ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ரேவண்ணாவிடம், ஓசூர் ஏ.எஸ்.பி., அணில் வாக்ரே விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கியுடன் வந்த குற்றத்திற்காக ரேவண்ணா, 34, நவீன், 24, புனித், 29, பிரவீண் குமார், 26, சிவகுமார், 28 ஆகியோரையும், செக்யூரிட்டிகளாக வந்த தனியார் செக்யூரிட்டி ஏஜன்சியை சேர்ந்த வகியா, 40, மகேசா, 24, மனுசந்திரன், 31, கிருஷ்ணகுட்டி, 52, கதேவ் மோகன் சம்பத் ராவ், 50, ஆகிய ஐவர் உள்பட, 10 பேரையும் டவுன் போலீசார் கைது செய்தனர்.
ரேவண்ணா கர்நாடக மாநிலத்திற்கு செல்லும்போது, பாதுகாப்புடன் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அங்கு, கைத்துப்பாக்கிகள் வைத்திருக்கும் தனியார் செக்யூரிட்டிகள் பாதுகாப்பு பணிகளுக்கு செல்ல அனுமதி வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.