அண்ணா பல்கலை விவகாரம் தமிழக அரசு மேல்முறையீடு
புதுடில்லி:சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் சமீபத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டது. போலீசாரின் செயல்பாடுகள் குறித்து கடுமையான அதிருப்திகளை வெளிப்படுத்தி இருந்த உயர் நீதிமன்றம், மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான போலீசாரின் முதல் தகவல் அறிக்கை வெளியே கசிந்த விவகாரம் குறித்து கேள்விகளை எழுப்பியது.
மேலும், சென்னை போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த குறிப்பிட்ட உத்தரவுக்கு எதிராக மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தமிழகஅரசு சார்பில் நேற்று மேல்முறையீடுசெய்யப்பட்டது.
தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் குமணன், 'முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கும், தமிழக போலீசாருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
மத்திய அரசின், என்.ஐ.சி., எனப்படும், தேசிய தகவல் மையத்தின் நிர்வாகக் குறைபாடுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, போலீஸ் கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, மனுவில் குறிப்பிட்டுள்ளார்.