அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க தேர்தல் கமிஷனுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட்

சென்னை:அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் குறித்து விசாரிக்க, தேர்தல் கமிஷனுக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'அ.தி.மு.க., உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்குகளில், தீர்வு காணும் வரை, அ.தி.மு.க.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக்கூடாது' என, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி, தேர்தல் கமிஷனுக்கு மனு அனுப்பினார். அதை பரிசீலிக்க, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, 'சூரியமூர்த்தி மனு பரிசீலனையில் உள்ளது' என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அவரது மனுவை, நான்கு வாரத்துக்குள் பரிசீலிக்கவும், பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட, அனைத்து தரப்பினர் கருத்துக்களையும் கேட்டு முடிவு செய்யவும், தேர்தல் கமிஷனுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில், தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது. 'அ.தி.மு.க., பொதுச் செயலராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அங்கீகரிக்கக்கூடாது' என, தேர்தல் கமிஷனிடம், அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள் கே.சி.பழனிசாமி, ரவீந்திர நாத், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், புகழேந்தி, சூரியமூர்த்தி உள்ளிட்டோர் மனு அளித்தனர். அதன் அடிப்படையிலும், தேர்தல் கமிஷன் விசாரித்து வருகிறது.

இந்நிலையில், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோரின் மனுக்களை, தேர்தல் கமிஷன்விசாரிக்க தடை கேட்டு, உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மனுக்கள் தாக்கல் செய்தார்.அ.தி.மு.க., கட்சியின் பதவி, சின்னம் உள்ளிட்டவை தொடர்பாக, சிவில் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை, வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், தேர்தல் கமிஷன், நீதித்துறைக்கு இணையான விசாரணையை நடத்துகிறது. அரசியல் கட்சிகளின் உள்விவகாரத்தில், தேர்தல் கமிஷன் ஓரளவுதான் தலையிட முடியும். எல்லா விவகாரத்திலும் தலையிட முடியாது.

கட்சியில் சமீபத்தில் இயற்றப்பட்ட, துணை விதிகளை எதிர்த்து அளிக்கப்பட்ட புகார்களை, தேர்தல் கமிஷன் விசாரிக்க முடியாது. அதுமட்டுமின்றி புகார் அளித்தவர்கள், அ.தி.மு.க.,வில் உறுப்பினர்களாக இல்லை. கட்சிக்கு சம்பந்தமே இல்லாதவர்களின் புகார்கள் மீது, தேர்தல் கமிஷன் விசாரணை நடத்த முடியாது.

கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் அளித்த புகார்கள் மீது பதில் அளிக்க, கடந்த டிச., 24ல் தேர்தல் கமிஷனின் செயலர் அனுப்பிய நோட்டீசை, ரத்து செய்ய வேண்டும். அந்த நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும்'' என, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, மனுதாரர் தரப்பில் டில்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம் ஆஜராகி,'அ.தி.மு.க.,வில் தற்போது உறுப்பினர்களாக இல்லாத, தனிப்பட்ட நபர்கள், கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து, தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுக்களை விசாரிக்க, தேர்தல் கமிஷனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது' என்றார்.

இந்த வாதத்தை, தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான, வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால் ஆமோதித்தார். இதை கேட்ட நீதிபதிகள், 'கடந்த முறை விசாரணை நடக்கிறது எனக் கூறியதால்தான், சூரியமூர்த்தி மனுவை, நான்கு வாரத்துக்குள் பரிசீலிக்க உத்தரவிடப்பட்டது. இதை முன்கூட்டியே, நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்க வேண்டும்' எனக் கூறி, கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சிவில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன.

இதே விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க, எந்த முகாந்திரமும் இல்லை. எனவே, அ.தி.மு.க., உள்கட்சி விவகாரம்

தொடர்பாக, தேர்தல் கமிஷன் விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அன்றைய தினம், இவ்விவகாரம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல கே.சி.பழனிசாமி உள்ளிட்டோரும், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.

Advertisement