'அகங்காரத்தை விட்டொழியுங்கள்' முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

1

திருப்பூர்:''தமிழக முதல்வர் தன் அகங்காரத்தை விட்டொழித்து, மூவர் கொலை வழக்கை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்,'' என்று, கொடுவாயில் தி.மு.க., அரசை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம், சேமலைகவுண்டன்பாளையத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு, செந்தில்குமார், கடந்த நவ., மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, 14 தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில், ஒன்றரை மாதமாகியும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் ஆரம்ப கட்ட நிலையிலேயே இருந்து வருகிறது.

இதையடுத்து, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், மூன்று பேர் படுகொலையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் இருக்கும் தி.மு.க., அரசை கண்டித்து, கொடுவாயில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் பங்கேற்ற மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

பாதிக்கப்பட்ட குடும்பத்தை டிச., 6ம் தேதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அன்றைக்கே தமிழக முதல்வருக்கு எவ்வித அரசியலும் இன்றி வெளிப்படையாக கடிதம் எழுதினேன். வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆனால், ஒரு மாதமாகியும் பதில் இல்லை. மாநில அரசு அனுமதியில்லாமல் விசாரிக்கக்கூடாது என, தி.மு.க., அரசு கடந்த 2023ல் சி.பி.ஐ., அதிகாரத்தை ரத்து செய்தது.

ஒரு குற்றவாளியை பிடிக்கவில்லையென்றால், குற்றவாளிக்கு பயம் நீங்கி விடும். கூலிப்படை தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.

இப்பகுதியில் வாழும் 50,000 பேரை சந்தித்து கையெழுத்து பெற்று, மக்களுடன் சென்று தமிழக கவர்னரை சந்தித்து குற்றவாளியை கண்டுபிடிக்க வலியுறுத்துவோம். காவல் துறை போன்ற ஜனநாயக அமைப்பு மீது நம்பிக்கை குறைவது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை குறையும். தமிழக முதல்வர் அகங்காரத்தை விட்டு விட்டு, இதை சி.பி.ஐ., வசம் ஒப்படைக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் தோற்கலாம்; ஆளும் அரசு தோற்கலாம். ஆனால், சிஸ்டம் தோற்கக்கூடாது. இங்கு சிஸ்டம் தோற்றுள்ளது. அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement