சிருங்கேரியில் நாளை நடக்கிறது ஸ்தோத்ர திரிவேணி பாராயணம்
கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரியில், 50,000 பக்தர்கள் பங்கேற்கும், பிரமாண்டமான ஸ்தோத்ர திரிவேணி பாராயணம் நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி நடக்கிறது.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் சன்யாச ஆசிரம ஸ்வீகாரத்தின், பொன்விழா கொண்டாட்டம், கடந்த ஓராண்டாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஸ்தோத்ர திரிவேணி பாராயணம்
நடக்கிறது.
இதில், தேவி ஸ்துதி, சிவ ஸ்துதி மற்றும் லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் ஸ்துதி என, மூன்று ஸ்தோத்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதை, 50,000 பக்தர்கள் ஒரே குரலாக பாராயணம்
செய்யவுள்ளனர்.
50வது ஆண்டு
இந்நிகழ்ச்சி, வரும் 11ம் தேதி, கர்நாடக மாநிலம், சிக்மகளூரு மாவட்டத்தில் உள்ள சிருங்கேரியில் நடக்கிறது.ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின், 36வது பீடாதிபதியாக ஜகத்குரு ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் உள்ளார். 2023 நவ., 10ம் தேதி இவர் சன்யாசத்தை மேற்கொண்ட 50வது ஆண்டு
துவங்கியது.
அப்போது, ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள், ஓராண்டிற்கு பல்வேறு தார்மிக மற்றும் கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்த உத்தரவிட்டார். இதன்படி, வைதிக நிகழ்ச்சிகள், தர்ம காரியங்கள், கலாசார நிகழ்வுகள் நடந்து வருகின்றன.முதலாவதாக, 2023 அக்., நவ., மாதங்களில், சகஸ்ர மோதக கணபதி ேஹாமம், அதி ருத்ர மகாயாகம் மற்றும் சகஸ்ர சண்டி மகாயாகம்
நடத்தப்பட்டன. தொடர்ந்து, சிருங்கேரியில் உள்ள நரசிம்ம வனத்தில், 2024 ஆக., 5 முதல் 11 வரை, கிருஷ்ண யஜுர்வேத ஹவனம் நடத்தப்பட்டது.
புகைப்பட கண்காட்சி
'அனைவருக்கும் கீதை, புராணங்களில் ஞானம், வேதாந்த பிரவேசம், வேதாந்த சிரவணம்' போன்ற தலைப்புகளில், ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில், சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் நடத்தப்பட்டன.
'சங்கர விஜயம்'
என்ற பெயரில், ஆதிசங்கரரின் வாழ்க்கை மற்றும் அவரது உபதேசங்களை மையமாகக் கொண்டு நடந்த விழாவில், பேச்சாளர்கள், இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் வாழ்க்கை மற்றும் உபதேசங்கள் குறித்த 'தர்மத்தின் உருவகம்' என்ற புகைப்பட கண்காட்சியும் இடம்பெற்றது.
இந்த மகோற்சவத்தின் நிறைவு விழா, வரும் ஏப்., 3ம் தேதி சிருங்கேரியில் நடக்கிறது. - நமது நிருபர் -