பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார்
திருச்சூர்:பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன், 80, உடல்நலக் குறைவால் கேரளாவில் காலமானார்.
கேரளாவின் திருச்சூரில் உள்ள இரிஞ்சாலாகூடாவைச் சேர்ந்தவர் பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு ஜெயச்சந்திரன் உயிரிழந்தார். இவர் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
சிறு வயதில் மிருதங்க இசையில் தேர்ச்சி பெற்ற ஜெயச்சந்திரன், பள்ளி, கல்லுாரிகளிலும், தேவாலயங்களிலும் பாடல்கள் பாடி வந்தார்.
கடந்த 1967ல், எம்.எஸ்.பாபுராஜ் இசையில் வெளியான உத்யோகஸ்தா மலையாள படத்தில்,'அநுராக கானம் போலே' என்ற பாடலை பாடி திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
மலையாளத்தில் பல பாடல்களை பாடிய அவரை, மணிப்பயல் படம் வாயிலாக தமிழில் அறிமுகப்படுத்தினார், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
இதைத் தொடர்ந்து மூன்று முடிச்சு, கடல் மீன்கள், வைதேகி காத்திருந்தாள், பூவே உனக்காக உட்பட பல்வேறு படங்களில் ஜெயச்சந்திரன் பாடியுள்ளார்.
இவர் பாடிய, 'தாலாட்டுதே வானம், ராசாத்தி உன்னை, பூவ எடுத்து ஒரு, கொடியிலே மல்லிகைப்பூ' உள்ளிட்ட பாடல்கள், இசை ரசிகர்கள்மத்தியில் இன்றும்எதிரொலிக்கின்றன.
மலையாளம், தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில், 16,000க்கும் மேற்பட்ட பாடல்களை இவர் பாடியுள்ளார்.
ஜி.தேவராஜன், எம்.எஸ்.பாபுராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், எம்.எம்.கீரவாணி, வித்யாசாகர் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்களுடன் ஜெயச்சந்திரன் பணியாற்றியுள்ளார்.
சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான தேசிய விருது பெற்ற இவர், தமிழக அரசின் கலைமாமணி விருது, நான்கு முறை தமிழக அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகர் விருது, ஐந்து முறை கேரள அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.