பாதுகாப்பு விதிமுறைகள் கடை பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாவட்டத்தில் சிவகாசி,சாத்துார், விருதுநகர், வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.100 க்கும் மேற்பட்ட லாரி செட்டுகள், அவற்றிற்கான குடோன்கள் உள்ளன. பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆலைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம்.

அதேபோல் பட்டாசு கடைகள், லாரி செட்டுகளில் விபத்து ஏற்படாமல்இருப்பதற்கு அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. பட்டாசுகடையில் அறையில் இரண்டு உலர் மாவு தீயணைப்பான்கள், 4 தீவாளிகள் எப்பொழுதும்நல்ல நிலையில் பராமரித்து வர வேண்டும்.

தீயணைப்பு பணிக்கு என 5000 லிட்டர் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு எப்பொழுதும் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். அதிக வெப்பம் வெளியிடும் மின் விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட தரமான மின்சாதனங்கள் சான்று பெற்றவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட்டாசு தொழில் அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே விற்பனையில் ஈடுபட வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் பட்டாசுகள்இருப்பு வைக்கவும், சேமிக்கவும் கூடாது. இடிதாங்கி அமைப்புகள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும். பட்டாசு விற்பனை செய்யப்படும்போது அவ்விடத்தில் வேறு பொருட்கள் சேமித்து வைத்தல் கூடாது. மேலும் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர அதன் அருகில் தற்காலிக கொட்டகை அமைத்து பட்டாசு விற்பனை செய்யக்கூடாது. வெளியேறும்வழி எப்போது தடையின்றி இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என பட்டாசு கடைகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்கின்றனர், அதே சமயத்தில் பட்டாசுகள் அனுப்பப்படும் லாரி செட்டுகள் பட்டாசு இருப்பு வைக்கப்பட்டிருக்கும் குடோன்களில் விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இது குறித்து அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. லாரி செட்டுகளில் அனுப்புவதற்காக கொண்டு வரப்படும் பட்டாசுகள் பெரும்பாலும் திறந்த நிலையிலேயே வைக்கப்படுகின்றன.

அப்பொழுது யாராவது எதிர்பாரவிதமாக புகை பிடிக்கும் போது தீக்குச்சியை துாக்கி எறிந்தால் கூட விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதேபோல் குடோனில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான பட்டாசுகள் இருப்பு வைக்கப்படுவதால் வெடி விபத்து ஏற்பட்டால் அதிக சேதாரம் ஏற்படுகின்றது.

கடந்த காலங்களில் சிவகாசியில் இது போல் லாரி செட்டுகளில் அதிகமாக இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளால் விபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே பட்டாசு கடைகள், லாரி செட்டுகள்,குடோனில் பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிப்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வதோடு, கடை பிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement