பிரதமர் குறித்த பேச்சை கண்டிக்கவில்லை சபாநாயகர் அப்பாவு மீது பா.ஜ., புகார்

சென்னை:பா.ஜ., எதிர்ப்பை தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பிரதமர் குறித்து பேசிய கருத்துக்கள், சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

சட்டசபையில் நடந்த விவாதம்:

பா.ஜ., - நயினார் நாகேந்திரன்: முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்தும், எதிர்த்தும் பேசலாம். தீர்மானத்தை ஆதரித்து பேசுவதற்காக, வேல்முருகன் என்னவெல்லாம் பேசினார் என்பது தெரியும். சபாநாயகர் அதை கண்டிப்பார் என்று நினைத்தேன். ஆனால், பார்த்தும் பார்க்காதது போலவும், கேட்டும் கேட்காதது போலவும் இருந்தார்.

சபாநாயகர் அப்பாவு: சபையில் பேசக்கூடாத வார்த்தை எதையும், யாரும் பயன்படுத்தவில்லை. தலைவர்களை இழிவுபடுத்தி பேச, இங்கு அனுமதிக்கவில்லை.

நயினார் நாகேந்திரன்: ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது, இந்த மாதிரி பிரதமரை பேசினர் என்பது, சபை குறிப்பில் இருக்க வேண்டும். அதை எடுக்கக் கூடாது.

சபாநாயகர்: மாநில அரசுகளின் கருத்தை கேட்காமல், யு.ஜி.சி., ஒரு சட்டத்தை கொண்டுவந்து திணிக்கும் போக்கைதான் அவர் கூறினார்.

நயினார் நாகேந்திரன்: மாநில உரிமைகளை பாதிக்கும் வகையில் இருந்தால், அதற்கு எதிர்ப்பு சொல்வதில் தவறில்லை. வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்பது முக்கியம்.

முதல்வர் ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் ஒரு பிரச்னையை கூறியுள்ளார். அதை ஆய்வு செய்து, அவர் சொல்வது போல் தவறாக இருந்தால் திருத்தலாம். அரசு தீர்மானத்துக்கு, பா.ஜ., ஆதரவா என்று சொல்லுங்கள்.

சபாநாயகர் அப்பாவு: முதல்வரின் கருத்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

நயினார் நாகேந்திரன்: முதல்வருக்கு நன்றி. நாட்டில், 100 ஆண்டுகளாக ஒரே கல்விக் கொள்கை உள்ளது; அதில் மாற்றம் வேண்டும். துணைவேந்தர் நியமனம் தொடர்பாக, மத்திய அரசு கொண்டு வந்திருப்பது வரைவு கொள்கை. அதன் மீது பிப்., 5 வரை, ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்காக, உயர்கல்வித்துறை அமைச்சர் டில்லி சென்றோ, கடிதம் வாயிலாகவோ, மத்திய அரசுக்கு கருத்தை தெரிவித்திருக்கலாம். எனவே, முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்க இயலாது; சபையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

அதைத் தொடர்ந்து, வேல்முருகன் பேசிய பேச்சுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, பிரதமர் குறித்து அவர் பேசிய வார்த்தைகள், சபை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

Advertisement