ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க உதவுவதாக நடித்து மோசடி; 2 வடமாநில தொழிலாளர் கைது
அனுப்பர்பாளையம்; திருப்பூர், பெரியார் காலனி, தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி, 39. பனியன் தொழிலாளி. இவர், கடந்த, 6ம் தேதி மதியம், 12:00 மணியளவில், தனது கையிலிருந்த 38,500 ரூபாயை, டெபாசிட் செய்ய, பெருமாநல்லுார் எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., மையத்துக்கு சென்றார்.
மெஷினில் பணத்தை டெபாசிட் செய்ய துரைசாமிக்கு தெரியாததால், அருகில் நின்றிருந்த நபர் உதவிக்கு வந்துள்ளார். தனது மனைவியின் ஏ.டி.எம்., கார்டு மற்றும் ரொக்க பணம் 38,500 ரூபாயை அந்நபரிடம் கொடுத்துள்ளார். தொகையை மெஷினில் டெபாசிட் செய்த நபர், ஏ.டி.எம்., கார்டை திருப்பி கொடுத்துள்ளார். துரைசாமி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, மனவி சாவித்திரியின் வங்கி கணக்கிலிருந்து, 10 ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு முறை எடுக்கப்பட்டதாகவும், மேலும் 64,500 ரூபாய்க்கு பொருள் வாங்கியதாகவும் மொபைலுக்கு மெசேஜ் வந்தது. துரைசாமி விசாரித்ததில், அவிநாசியிலுள்ள ஒரு நகைக்கடையில், 64,500 ரூபாய்க்கு நகை வாங்கப்பட்டதாக தெரிந்தது.
ஏ.டி.எம்.,- ல் உதவிக்காக வந்த நபர் திருப்பிக்கொடுத்த ஏ.டி.எம்., கார்டை பார்த்த துரை சாமி அதிர்ச்சி அடைந்தார். அது, செயல்படாத போலி கார்டு என்பது தெரியவந்தது. இவ்வாறு, ஒரு லட்சத்து 4,500 ரூபாய் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக பெருமாநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பீகார் மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார், 31, மன்சூர் ஆலம், 28 ஆகிய இருவரையும் கைது செய்தனர்.