* சூப்பர் ரிப்போர்டர் :
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாகலிங்க நகர் தெற்கு பகுதியில் வாறுகால், ரோடு அமைப்பதற்காக தெருக்களை தோண்டி விட்டு பணிகளை கிடப்பில் போட்டுள்ளதால் அதை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் மக்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
அருப்புக்கோட்டை நகராட்சி 17வது வார்டில் சேர்ந்தது நாகலிங்க நகர். இங்குள்ள தெற்கு பகுதியில் போதுமான அடிப்படை வசதிகளின்றி மக்கள்அவதிப்படுகின்றனர். நாகலிங்க நகர் மெயின் ரோட்டை அமைப்பதற்காக 4 மாதங்களுக்கு முன்பு ரோட்டின் நடுவில் ஜல்லி, மணலை கொட்டி வைத்துள்ளனர்.
ரோட்டின் இருபுறமும் வாறுகாலுக்காக தோண்டப்பட்டு பாதியிலேயே பணியை கிடப்பில் போட்டுள்ளனர். அகலமாக தோண்டியுள்ளதால் ரோட்டில் இருந்து தெருக்களுக்குள் செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். டூவீலர்களில் செல்ல முடிவதில்லை.
தெருவின் இரு பக்கங்களிலும் இதே போன்று தோண்டி பணியை கிடப்பில் போட்டதால் வயதானவர்கள் வாறுகாலை கடந்து வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது.
அப்பகுதி மக்கள் ரோட்டிலேயே டூவீலரை நிறுத்த வேண்டி இருப்பதாக புலம்புகின்றனர். நான்கு மாதங்களாக எங்கள் தெருவை நகராட்சியினர் லாக் செய்துள்ளனர் என மக்கள் கூறுகின்றனர்.
தெற்கு பகுதியிலேயே பார்வதி நகர், காமராஜ் நகர், இம்மானுவேல் தெருஉட்பட புறநகர் பகுதிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை.
நகராட்சி மூலம் குடிநீர் பகிர்மான குழாய் தெருக்களில் பதிக்கப்பட்டுள்ளது.இந்த குழாய்களை கடமைக்காக பணி செய்துஉள்ளனர். இதனால் பல பகுதிகளில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. அடிக்கடி நகராட்சியினர் பழுது பார்க்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் குடிநீர் வினியோகம் அடிக்கடி தடைபடுவதாக மக்கள் கூறுகின்றனர்.
பல தெருக்களில் வாறுகால் இல்லை. பொது கழிப்பறைகள் இல்லை. புழக்கத்திற்கு மினி பவர் தொட்டி இல்லை. முறையான ரோடு வசதி இல்லாததால் மழைக்காலங்களில் சேறும், சகதியும் ஆக இருப்பதால் ரோட்டில் நடந்து செல்ல முடியவில்லை.
ஜல்லிகளால் விபத்துக்கள்
ராஜேந்திரன், ஓய்வு அலுவலர்: நாகலிங்க நகர் தெற்கு பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட தெருக்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மெயின் ரோடு போடுவதற்காக 4 மாதங்களுக்கு முன்பு ஜல்லி, மணலை கொட்டி வைத்துவிட்டு பணியை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் டூவீலர்களில் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றோம்.
இரவு நேரங்களில் வாகனங்களில் வருபவர்களுக்கு குவித்து வைக்கப்பட்டுள்ள ஜல்லிகளால்விபத்து ஏற்படுகிறது. ரோடு அமைக்காவிட்டாலும் பரவாயில்லை ஜல்லி, மணலை அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தோண்டியதோடு நிறுத்திட்டாங்க
சந்திரசேகரன், நெசவாளர்: மெயின் ரோட்டின் இருபுறமும் வாறுகால் அமைப்பதற்காக பழைய வாறுகாலை இடித்துவிட்டு புதியதாக கட்ட அகலமாக தோண்டி வைத்து விட்டு பணியை கிடப்பில் போட்டுள்ளனர்.
இதனால் 4 மாதங்களாகரோட்டில் இருந்து தெருவிற்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். நகராட்சியினர் வாறுகால் பணியை விரைவில் துவங்கி முடிக்க வேண்டும்.
விரைவில் முடிக்கவும்
கண்ணன், நெசவாளர்: நாகலிங்க நகர் தெற்கு பகுதியில் உள்ள புறநகர் பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வளர்ச்சி பணிகளை செய்வதில் நகராட்சி மெத்தனம் காட்டுகிறது. செய்கின்ற பணிகளையும் அரைகுறையாக பாதியிலேயே கிடப்பில் போட்டு விடுகிறது. இதனால் மக்களுக்கு மேலும் மேலும் சிரமம் ஏற்படுகிறது.
செய்கின்ற பணிகளை விரைவில் முடிக்கவும், தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவும்நகராட்சி முன்வர வேண்டும்.