ஈரோடு கிழக்கில் மூவர் மனு தாக்கல்

ஈரோடு:ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மூன்று பேர் மனுத்தாக்கல் செய்தனர்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில், வேட்பு மனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி தலைமை அலுவலக கட்டடத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் அறையில், வேட்பு மனு பெறப்பட்டன.

* முதல் வேட்பாளராக சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் கே.பத்மராஜன், மனுத்தாக்கல் செய்தார்.

பின், அவர் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா, பழனிசாமி தற்போதைய முதல்வர் ஸ்டாலின் உட்பட பலருக்கு போட்டியாகவும், ஜனாதிபதி தேர்தல் உட்பட இதுவரை, மனுத்தாக்கல் செய்துள்ளேன். வயநாட்டில் பிரியங்காவுக்கு எதிராக, 246வது மனுவை தாக்கல் செய்தேன். ஈரோடு கிழக்கில், 247வது மனுவை தாக்கல் செய்துள்ளேன். இதுவரை ஒரு கோடி ரூபாய் செலவிட்டுள்ளேன். ஒரு முறை கூட டிபாசிட் பெற்றதில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஒரு முறை ஒரு ஓட்டு கூட பெறவில்லை. கின்னஸ் சாதனைக்காக தொடர்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

* ராணுவத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற, கரூர், ஆத்துார் பிரிவை சேர்ந்த மதுரை விநாயகம், 51; கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த நுார்முகம்மது, 67, ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் நுார் முகமது தலையில் மஞ்சள் துண்டு கட்டி, இடுகாட்டுக்கு செல்பவர்கள் போல, கையில் தீச்சட்டி, பால், சங்கு ஊதி, சேகண்டி அடித்தபடி வந்தார்.

அவர் கூறுகையில், ''நான் தற்போது, 46வது மனுவை தாக்கல் செய்கிறேன். ஓட்டுக்கு பணம் பெறுதல், ஓட்டுப்போடாமல் வீட்டில் இருப்பதை கைவிட்டு, 100 சதவீதம் ஓட்டுப்போடுவதை வலியுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவே மனு தாக்கல் செய்துள்ளேன்,'' என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement