தேவநாதன் மீதான மோசடி வழக்கில் ரூ.280 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை:'பணமோசடி வழக்கில் கைதாகி உள்ள தேவநாதன் மற்றும் அவரின் கூட்டாளிகள், 174 கோடி ரூபாய்க்கு பங்குகளும், 280 கோடி ரூபாய்க்கு சொத்துக்களும் வாங்கியது தெரியவந்துள்ளது' என, பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

பணமோசடி தொடர்பாக, சென்னை மயிலாப்பூர் ஹிந்து பர்மனன்ட் பண்ட் என்ற நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் தேவநாதன், 64, குணசீலன், 57, மகிமைநாதன், 53, தேவசேனாதிபதி, 63, கதிர் சங்கர், 46, சாலமன் மோகன்தாஸ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவர்களில், சாலமன் மோகன்தாஸ் தவிர மற்ற ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், 586 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர்.

இது தொடர்பாக, 5,160 பேர் புகார் அளித்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, 11 இடங்களில் சோதனை நடத்தி, ரொக்கம், 7.53 லட்சம், வங்கி இருப்பில் இருந்த, 16.17 லட்சம், 22 சவரன் தங்கம், 80 கிராம் வெள்ளி மற்றும் ஆறு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர் விசாரணையில், 280 கோடி ரூபாய்க்கு அசையாச் சொத்துக்கள், 174 கோடி ரூபாய்க்கு பங்குகள் வாங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

இவ்வழக்கில், கடந்தாண்டு நவ., 11ல், டான்பிட் எனப்படும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் முதன்மை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கைதாகி உள்ள நபர்களின் சொத்துக்களை முடக்கம் செய்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு விரைவில் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement