2 வாரத்தில் ரூ.1,000 கோடிக்கு விற்ற 'ரெட்மீ நோட் 14' மாடல்கள்
புதுடில்லி:இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரெட்மீ நோட் 14 5ஜி' மாடல்கள், இரண்டே வாரங்களில் 1,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக 'ஷாவ்மி இந்தியா' நிறுவனம் தெரிவித்துஉள்ளது.
இது, நிறுவனத்தின் மீதுள்ள இந்தியர்களின் நம்பிக்கையையும், நாட்டின் ஸ்மார்ட்போன் சந்தையில் நிறுவனத்துக்கு உள்ள வரவேற்பையும் எடுத்துக்காட்டுவதாக, ஷாவ்மி இந்தியா தெரிவித்துள்ளது.
ரெட்மீ நோட் 14 பிரிவின் கீழ் 'ரெட்மீ நோட் 14, நோட் 14 ப்ரோ, நோட் 14 ப்ரோ பிளஸ்' ஆகிய மூன்று 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்கள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன.
சிறப்பான கேமரா மற்றும் ஏ.ஐ., அம்சங்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 17,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.
இவை, நிலைத்த ஆயுள், தண்ணீர், துாசியிலிருந்து பாதுகாப்பு ஆகிய அம்சங்களுக்கு ரேட்டிங் பெற்றுள்ளன.
இந்த மாடல்கள் அதிக பேட்டரி திறன் கொண்டுள்ளதால், நீண்ட நேரம் வீடியோ எடுக்க பயனுள்ளதாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இவை தவிர, நடப்பாண்டின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போனாக 'ரெட்மீ 14சி 5ஜி' மொபைல் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரீமியம் அம்சங்களுடன் 10,000 ரூபாய்க்கு குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5,160 எம்.ஏ.எச்., பேட்டரி பவருடன், 50 மெகா பிக்சல் இரட்டை கேமராக்களைக் கொண்டுள்ளது. இதன் விலை 9,999 ரூபாயிலிருந்து துவங்குகிறது.
இந்த ஸ்மார்ட்போன்கள், எம்ஐ.காம் இணையதளம், சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.