உணவில் விஷம்: ஜோகோவிச் புகார்
மெல்போர்ன்: ''மெல்போர்ன் ஓட்டலில் விஷத்தன்மை கொண்ட உணவு வழங்கப்பட்டது,'' என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச் 37. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 24 பட்டம் வென்றவர். கடந்த 2022ல் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க மெல்போர்ன் வந்தார். இவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், 'விசா' ரத்து செய்யப்பட்டு மீண்டும் செர்பியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க மெல்போர்ன் வந்துள்ளார்.
தனது முந்தைய அனுபவம் குறித்து ஜோகோவிச் கூறியது: நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் உங்கள் உடலுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதற்கான உரிமையை மற்றவர்கள் பறிக்கக் கூடாது. என்னைப் பொறுத்தவரை நான் விளையாட்டு வீரர். எனது உடலில் நிறைய நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால் ஊசி செலுத்திக் கொள்ள தேவையில்லை என முடிவு செய்தேன்.
ஒருவழியாக செர்பியா திரும்பியதும், உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. முதலில் சாதாரணமாக வந்த காய்ச்சல், பின் என்னை மிகவும் மோசமாக்கியது. மருத்துவக்குழு வீட்டில் வந்து சிகிச்சை தந்தது. இதனால், மெல்போர்ன் ஓட்டலில் கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக உணர்ந்தேன். இது தொடர்பான சோதனையில், 'உணவில் அதிக அளவு பாதரசம், ஈயம் கலந்து இருந்தது,' தெரிந்தது. இதுகுறித்து யாரிடமும் அப்போது தெரிவிக்கவில்லை.
இவ்வாறு ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
ஜோகோவிச் புகார் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,''இது தனிநபர் சம்பந்தப்பட்டது. உள்துறை கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது,'' என்றார்.