சாலையில் சுற்றித்திரியும் நாய், மாடுகளுக்கு...கடிவாளம்!:கருத்தடை, பறிமுதல் செய்ய கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு:'சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்க வேண்டும். நாய்களுக்கு கருத்தடை செய்ய வேண்டும்' என, நகராட்சி கமிஷனர்களுக்கு, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சிகள் மற்றும் அச்சிறுபாக்கம், கருங்குழி, இடைக்கழிநாடு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
இந்த உள்ளாட்சி பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில், மாடுகள் சுற்றித் திரிகின்றன.
இவற்றால் போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துக்கள் அதிகமாக நடக்கின்றன. இதுமட்டுமின்றி, உள்ளாட்சி பகுதிகளில், விவசாய நிலங்களில் உள்ள பயிரை, மாடுகள் சேதப்படுத்தி அழிக்கின்றன.
இதை கட்டுப்படுத்த, விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து, காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியம், கொண்டமங்கலத்தில், மாவட்ட நிர்வாகம் 2023ல் கோசாலை அமைத்தது.அதன் பின், உள்ளாட்சி நிர்வாகத்தினர், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன் பின், மாடுகளை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதுகுறித்து, மீண்டும் கலெக்டருக்கு கோரிக்கை மனுக்கள் சென்ற நிலையில், சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கவும், கால்நடை உரிமையாளர்களுக்கு ஒரு மாட்டிற்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும், உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ், கடந்தாண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்குப் பின், சாலையில் திரியும் மாடுகளை பிடிக்கும் பணி செங்கல்பட்டில் தொடரும் நிலையில், மற்ற பகுதிகளில் நடவடிக்கையின்றி, தொய்வு ஏற்பட்டுள்ளது.
நாய் தொல்லை
இதேபோல், செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், தெருநாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. ஒரு சில நாய்கள்,'ரேபிஸ்' நோயால் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த நாய்கள் கடித்து, பலர் பாதிக்கப்பட்டனர். அதன் பின், 2022ல் செங்கல்பட்டு நகராட்சியில் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய, தனியார் நிறுவனம் வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அப்போது, 50க்கும் மேற்பட்ட நாய்கள் இறந்ததால், கருத்தடை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் கைவிட்டது.
தற்போது, தெருநாய்களின் பெருக்கம் அதிகரித்து, பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதபோன்று, மறைமலைநகர் நகராட்சி பகுதியில் கடந்தாண்டு, 1,420 தெருநாய்கள் கண்டறியப்பட்டு, 720 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.
காந்தி நகர் பகுதியில், நாய்களுக்கு கருத்தடை செய்யும் கூடத்தை பராமரிக்கும் பணி, 15 லட்சம் ரூபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புக்கான கூட்டம், நேற்று நடந்தது.
இதில், மறைமலைநகரைச் சேர்ந்தவர்கள்,'மறைமலைநகர் நகராட்சி பகுதியில், கடந்த இரு மாதங்களுக்கு முன், சாலையில் திரிந்த மாடு மோதியதில், இரண்டு பேர் இறந்தனர்; சிலர் படுகாயமடைந்தனர்.
தெரு நாய்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதை கண்டுப்படுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, மாவட்டத்தில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கவும், மாட்டின் உரிமையாளர்களுக்கு, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கவும் ஏற்கனவே அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
நகராட்சி பகுதிகளில் சாலையில் திரியும் மாடுகளை கட்டுப்படுத்தவும், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யவும், நகராட்சி கமிஷனர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
செங்கல்பட்டு நகராட்சியில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் கூடம் கட்ட, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
-பி.ஆண்டவன்,
செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர்.