ஒரகடம் சர்வீஸ் சாலை சீரமைப்பு பணி வேகம்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில், 180க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், வல்லம், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப் பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், 1,200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கொண்டுவர மற்றும் உற்பத்தி செய்த பொருட்கைளை ஏற்றி செல்ல, தினமும் ஏராளமானகன்டெய்னர், கனரகவாகனங்கள், ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்ட லுார் -- வாலாஜாபாத் சாலைகளை பயன்படுத்தி சென்று வருகின்றன.
ஒரகடத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுார் செல்லும் சர்வீஸ் சாலை, இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
எனவே, சேதமடைந்த சர்வீஸ் சாலையைசீரமைக்க வேண்டுமென,வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தனர்.
இதையடுத்து, ஒரகடம் மேம்பாலத்தில் இருந்து மாத்துார் சந்திப்பு வரை, 2 கி.மீ., சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்பதுார் செல்லும் சாலையில், இரண்டு பக்கங்களிலும் உள்ள பழைய சர்வீஸ் சாலையை முழுதும் அகற்றி, புதிய சாலை அமைக்கும்பணியில் ஈடுபட்டு வருவதாக நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.