காந்தி ரோட்டில் பிளாஸ்டிக் தடுப்பு பொருத்தும் பணிகள் தீவிரம்
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி முழுதும் போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். காந்திரோடு, பூக்கடைச்சத்திரம், மடம் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, காந்திரோட்டில் உள்ள கடைகளுக்கு இருபுறமும் தனி பாதையும், நடுவே உள்ள பாதையில் பேருந்து, கார் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் வகையில் ஒரு வழிப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்பாதையை மாற்ற வலியுறுத்தி, வியாபாரிகள்தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். வியாபாரிகளிடம் பேசி போலீசார்சமாளித்தனர்.
இதையடுத்து, காந்திரோட்டில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய போக்குவரத்து மாற்றங்களைவலுப்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் தடுப்புகள் அமைக்கும் பணியை, நெடுஞ்சாலை துறை மேற்கொண்டு வருகிறது.
கடைகளுக்கு தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதைக்கு, பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட தடுப்புகளை காந்திரோடு முழுதும் பொருத்தப்படுகிறது. ஆனால், இந்த தடுப்புகள் நீண்ட காலம் வருமா எனவும், அவற்றை எளிதாக வாகன ஓட்டிகள் உடைக்க வாய்ப்புகள் உள்ளதாகநகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இரும்பால் ஆன தடுப்புகள் நல்ல பலன் அளித்ததாகவும், தேர் செல்லும்சமயத்தில் இந்த பிளாஸ்டிக்தடுப்புகள் அகற்றப் படுமா எனவும் கேள்விஎழுந்துள்ளது.