பல்லாங்குழியான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம் குருமஞ்சேரி கிராமத்தில் இருந்து, பினாயூர் வழியாக திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை பயன்படுத்தி, கரும்பாக்கம், பினாயூர், சாத்தணஞ்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தினர், வாலாஜாபாத், உத்திரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.

மேலும், மதுார், அருங்குன்றம், பினாயூர் ஆகிய பகுதிகளில் இயங்கும் கல் குவாரி, கிரஷர்களில் இருந்து, ஜல்லி கற்கள், எம்.சாண்ட் ஆகியவை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, லாரிகள் வாயிலாக கொண்டு செல்லப்படுகின்றன.

தொடர்ந்து, அதிகபாரத்துடன் லாரிகள் செல்வதால், சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement